பொது இடங்களிலும் கூட்ட நெரிசலான நிகழ்வுகளிலும் சந்தேக நபர்களை விரைவாக அடையாளம் காண டில்லி போலீசார் ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் இந்த கண்ணாடிகள் மூலம் 2,500க்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உள்ளவர்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

பார்வைக்கு சாதாரண ஸ்மார்ட் கண்ணாடி போலத் தோன்றியதால் சிலர் இதை நுகர்வோர் பயன்பாட்டுக்கான கண்ணாடி என நினைத்தனர். ஆனால் இது மெட்டா ரே-பான் கண்ணாடி அல்ல; டில்லி போலீசாருக்காக இந்தியாவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும், மும்பையைச் சேர்ந்த Ajnalens நிறுவனம் இதை தயாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, அதிகாரி ஒருவர் பார்ப்பதற்கே அந்த நபரின் முகத்தை கண்ணாடி உடனடியாக ஸ்கேன் செய்து, சில மில்லி விநாடிகளில் நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள சுமார் 65,000 பதிவுகளுடன் ஒப்பிடுகிறது. குற்றவாளிகள் அல்லது தேடப்படும் நபர்களின் படங்களுடன் பொருந்தினால், அதிகாரிக்கு எச்சரிக்கை வழங்குகிறது.

இணைய இணைப்பு தேவையில்லாமல் குற்றப் பதிவேட்டுத் தரவுகளுடன் முகங்களை உடனடியாக ஒப்பிட முடிவதால், கூட்டம் அதிகமான பகுதிகளில் இது பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கண்ணாடி ‘ஜார்விஸ்’ (Jarvis) என்ற மென்பொருளின் கண்காணிப்பில் இயங்குகிறது; இது குருகிராமில் உள்ள ஒரு ஏஐ ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியின் பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களுடன் இணைக்கப்பட்ட இந்த மென்பொருள் முகங்கள், வாகனங்கள், கூட்டங்களை ஸ்கேன் செய்யும் வகையில் பயன்படுத்தப்படுகிறது; இதே மென்பொருள் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் போலீசாருடன் இணைந்து குற்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கவும், காணாமல் போனவர்களைத் தேட உதவவும் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.