புதுடில்லி: பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை மேற்கொள்ளாவிட்டால் பெட்ரோல் விலை கணிசமாக உயரக்கூடும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்ட அறிக்கையில், எத்தனால் கலப்பின் நோக்கம் எரிபொருளை மலிவாக கிடைக்கச் செய்வதும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதும், எரிபொருள் இறக்குமதிக்கான செலவினத்தை குறைப்பதும் என கூறப்பட்டுள்ளது.
எத்தனால் கலப்பு இல்லையெனில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 முதல் ரூ.130 வரை எட்டக்கூடும் என்றும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 135 டாலரை எட்டினால் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்த (E20) பெட்ரோல் மூலம் லிட்டருக்கு சுமார் ரூ.30 வரை சேமிக்க முடியும் என்றும், கலப்பை அனுமதிக்காவிட்டால் விலை உயர்வின் தாக்கத்தை நுகர்வோர் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
E20 பெட்ரோல் குறித்து விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் நீடிக்கும் நிலையில் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.





