பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) ‘பாகிஸ்தான் காஷ்மீர்’ என குறிப்பிடும் வகையில் அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு குறிப்பிடுவது இந்தியாவின் நிலைப்பாட்டை தவறாக பிரதிபலிப்பதாக அரசு கூறியுள்ளது.

டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என தெரிவித்தார். இந்த பகுதிகள் இந்தியப் பிரதேசமாகவே இருந்தன; எப்போதும் இந்தியாவின் அங்கமாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அந்த பகுதியின் சரியான பெயரையே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு முன்பாக, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்த தலைப்பை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது. ‘நியூயார்க் டைம்ஸ்’ தலைப்பு முற்றிலும் தவறானது; ஒரு நாட்டின் பகுதி குறித்து தவறான வழிகாட்டுதலை அளிக்கிறது என தெரிவித்தது.

மேலும் ‘பாகிஸ்தான் காஷ்மீர்’ என்ற பெயரில் எந்த பகுதியும் இல்லை; அது பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மட்டுமே என்றும், அந்த பகுதி இந்தியாவுக்கே சொந்தம் என்றும் தூதரகம் கூறியது. சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதியில் பாகிஸ்தான் வன்முறையை ஏவிவிடுகிறது என்றும் குற்றஞ்சாட்டியது.