ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் அமைந்துள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். மேலும் ரூ.17,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த கிரீன்ஃபீல்டு விமான நிலையம் ரூ.4,727 கோடி செலவில் 31 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஆந்திரப் பிரதேசம் எப்போதும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் மாநிலம் என்றும், மாநில இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் திறமையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். முதலீடு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்பதே அரசின் தாரக மந்திரம் என குறிப்பிட்டு, அதனால்தான் அரசு முதலீட்டை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தனியார் துறையையும் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாக கூறிய அவர், முதலீடு அதிகரித்தால் உற்பத்தி உயரும்; உற்பத்தி உயர்ந்தால் ஏற்றுமதி அதிகரிக்கும்; அதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார். வேலைவாய்ப்பு உயர்வால் மக்களின் வருமானம் அதிகரித்து குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றும் அவர் விளக்கினார்.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், 2014-ல் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில் தற்போது அது 166 ஆக உயர்ந்துள்ளதாகவும் மோடி கூறினார். ஒரு காலத்தில் பெரிய நகரங்களுக்கு மட்டுமே இருந்த விமானப் பயணம், இப்போது சிறிய நகரங்களுக்கும் விரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





