அடுத்தாண்டு இஸ்லாமாபாதில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் 2001ஆம் ஆண்டு பீஜிங்கில் எஸ்.சி.ஓ. அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அமைப்பின் சுழற்சி முறையின்படி அடுத்தாண்டுக்கான உச்சி மாநாட்டை பாகிஸ்தான் நடத்தவுள்ளதாகவும், அதற்காக உறுப்புநாடுகளின் தலைவர்களுக்கு அழைப்புகள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எஸ்.சி.ஓ. நடைமுறைகளின்படி அனைத்து உறுப்புநாடுகளுக்கும் அழைப்பு விடுப்பது மாநாட்டை நடத்தும் நாட்டின் கடமை என பாகிஸ்தான் வெளியுறவு துறை தெரிவித்தது. அந்த அடிப்படையில் இந்தியாவுக்கும் அழைப்பு அனுப்பப்படும் என்றும், பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாடு இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ளதாகவும், உறுப்புநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





