பழனி தண்டபாணி கோவில் நில மோசடி குறித்த புகார்களைத் தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய பத்திரப்பதிவுத் துறை சிறப்பு தணிக்கையை தொடங்கியுள்ளது.
கோவிலுக்குச் சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சட்டவிரோதமாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் பழனியில் பொறுப்பேற்ற 2024 பிப்ரவரி முதல், இடைநீக்கம் செய்யப்பட்ட நாள் வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும், அதனால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இழப்புகளையும் முழுமையாக பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக, சிவகங்கை உதவி பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் சுவாமிநாதன், சேலம் மேற்கு சார்-பதிவாளர் கீதா, விருதுநகர் சார்-பதிவாளர் காஜா முஹைதீன் உள்ளிட்டோர், அலுவலக உதவியாளர்கள் மோகன்ராஜ் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
குழுவினர் தற்போது பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு தணிக்கை முடிவடைந்து, அதன் விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என துறை உத்தரவிட்டுள்ளது.





