கிளாஸ்கோவில் இந்தியாவுக்கு குத்துச்சண்டை தங்க மழை
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரே நாளில் குத்துச்சண்டையில் அடுத்தடுத்து தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. ப்ரீத்தி பவார் மற்றும் ஜாஸ்மின் தங்கம் வென்று இந்திய அணியின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினர்.
54 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் ப்ரீத்தி பவார் கனடாவின் ஸ்கார்லெட் சவான்னாவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் எதிரணி ஆதிக்கம் செலுத்தினாலும், ப்ரீத்தி சுதாரித்து விளையாடி முதல் சுற்றில் 5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார்.
இரண்டாவது சுற்றிலும் துல்லியமான பஞ்ச்களால் எதிரணியை நிலைகுலையச் செய்து மேலும் 5 புள்ளிகளை சேர்த்தார். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் ப்ரீத்தி தங்கம் வென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி, போட்டியின் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் அயர்லாந்தின் மைக்கெலா வால்ஸை வீழ்த்தி ஜாஸ்மின் தங்கம் வென்று, குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தையும் உறுதி செய்தார்.
இதற்கிடையில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதுவரை இந்தியா 7 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்கள் பெற்று, பதக்கப்பட்டியலில் 6-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.





