ஜனாதிபதி ஒப்புதல்; அரசிதழில் அறிவிப்பு
பொதுத்தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதை மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழ் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த மசோதா அண்மையில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் மாநிலங்களவையிலும் அனுமதி பெற்ற பிறகு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க முடியும். மேலும், குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாக முடிக்க, ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்கள் அமைத்து விரைவான விசாரணை நடத்தும் ஏற்பாடும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.





