சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.7,000 லஞ்சம் கேட்டதாகவும் பெற்றதாகவும் கூறப்படும் பெண் உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கே.ஆர்.தோப்பூர் மின் பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றும் கவிதா (43) என்பவரே கைது செய்யப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர். கயிறு திரிக்கும் தொழிலாளி ஒருவர் தனது கூடத்துக்கு மின் இணைப்பு கோரி அவரை அணுகியுள்ளார்.
அப்போது மின் இணைப்பை வழங்க ரூ.7,000 வழங்க வேண்டும் என அவர் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத தொழிலாளி சேலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
அதன்பின் லஞ்ச ஒழிப்பு துறையின் அறிவுறுத்தலின்படி மின் அலுவலகத்தில் பணம் வழங்கப்பட்ட போது, கவிதா அதை பெற்றதாக கூறப்படுகிறது. அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான குழுவினர் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.





