முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்படும் பலதார திருமண நடைமுறையை சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மத்திய அரசிடம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகளிர் உரிமை ஆர்வலர் ஜாஹியா சோமன் தாக்கல் செய்த இந்த மனுவில், முஸ்லிம் ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொள்வதால் பெண்களின் சமத்துவமும் கண்ணியமும் பாதிக்கப்படுவதாகவும், பாலினப் பாகுபாடற்ற வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறையால் பெண்களும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பல இன்னல்கள் மற்றும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க, முஸ்லிம் திருமணங்களை அரசிடம் கட்டாயமாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. பலதார திருமணம் ஒழிக்கப்படும் வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பலதார திருமணத்திற்கான தண்டனைப் பிரிவை அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதன் மூலம், முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் உள்ள பலதார திருமண நடைமுறையின் அரசியல்சாசன செல்லுபடித் தன்மையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.