டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி, தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள், சட்டவிரோதமாக ‘பார்’கள் ஒதுக்கீடு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடந்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்பு துறை ஜூலை 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தார். வழக்கு முதலில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் வந்தபோது, நீதிபதி வி.மோகனா தாம் முன்பு இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜரானதாகக் கூறி விசாரணையிலிருந்து விலகினார். பின்னர் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய புதிய அமர்வு வழக்கை விசாரித்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முதற்கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அரசியல் காரணங்களால் வழக்கு மீண்டும் தொடங்கப்பட்டதாக வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், முறைகேடு ரூ.1,000 கோடி வரை இருக்கலாம் என்றும், வெளியில் இருந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும்; விசாரணையை இழுத்தடிப்பார் என்றும் கூறி முன்ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு, கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து, மேல்முறையீட்டு மனுவில் அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்; சாட்சிகளை பாதிக்கக் கூடாது; விசாரணையில் தலையிடக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நிபந்தனைகளை மீறினால் முன்ஜாமின் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.