ஸ்பெயின் எல்லைக்குள் ஒரே நாளில் சுமார் 60,000 அகதிகள் திடீரென நுழைய முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தடுக்கவும் வெளியேற்றவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 34 பேர் உயிரிழந்தனர்.
மொராக்கோவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை காரணமாக பலர் வாழ்வாதாரம் தேடி, ஸ்பெயினின் வட ஆப்ரிக்க பகுதியான சியூட்டாவை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. கடல் வழியாக வரும் அகதிகளை உடனடியாக நாடு கடத்த முடியாது என ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்த பின்னணியிலும் இந்த நுழைவு முயற்சி நடந்துள்ளது.
அன்று தரை வழியிலும் கடல் வழியிலும் பெரும் கூட்டம் சியூட்டாவுக்குள் செல்ல முயன்றது. சியூட்டாவை நோக்கிய குன்றுப் பகுதியில் திரண்டிருந்த அகதிகள் மீது மொராக்கோ பாதுகாப்புப் படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதாகவும், அதனால் பலர் தப்பிக்க முயன்ற போது கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் சிலர் ஸ்பெயினை நோக்கி முன்னேற, இன்னொருபுறம் பலர் மொராக்கோவுக்குத் திரும்பினர். அதே நேரத்தில் எல்லைத் தடுப்பு வேலியை ஒரே நேரத்தில் பலர் கடக்க முயன்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடல் சம்பவமும் எல்லை வேலி பகுதியில் ஏற்பட்ட நெரிசலும் சேர்ந்து 34 அகதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சியூட்டாவைத் தொடர்ந்து ஸ்பெயினின் மற்றொரு வட ஆப்ரிக்க பகுதியான மெலில்லாவிலும் அகதிகள் நுழைய முயன்றனர். எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் அவர்களின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் எல்லையை மீறி நுழைந்தது ஸ்பெயினின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்றும், இதற்கு மனிதக் கடத்தல் கும்பல்களே காரணம் என்றும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குற்றம் சாட்டினார். இந்த அகதிகள் பிரச்னை காரணமாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி தங்கள் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.





