2019 ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு வழக்கில், இலங்கை போலீஸ் முன்னாள் ஐஜி பூஜித் ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் உயரதிகாரி ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த தாக்குதலில் 45 வெளிநாட்டினர் உட்பட 279 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2019 ஏப்ரல் 21 அன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகளை குறிவைத்து அடுத்தடுத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தன. தாக்குதலுக்கு முன்பே கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டே இந்த வழக்கின் மையமாக இருந்தது.

வழக்கு விவரங்களின்படி, தாக்குதல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே தற்கொலைத் தாக்குதல் நடக்கலாம் என இந்திய உளவுத்துறை இலங்கை அரசுக்கு எச்சரிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த எச்சரிக்கையை பாதுகாப்புப் படையினரும் உயர் அதிகாரிகளும் அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர். 2022ல் கொழும்பு உயர் நீதிமன்றம் அவர்களை விடுவித்த நிலையில், அரசு மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

இறுதி தீர்ப்பில், குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதும் தொடர்பான கடமையில் இருவரும் தவறியதாக நீதிபதிகள் குறிப்பிட்டு தூக்கு தண்டனை விதித்தனர். இலங்கையில் 1976க்கு பிறகு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை; முன்பு தூக்கு தண்டனை பெற்றவர்களுக்கு அது பொதுவாக ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.