தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே காலகட்டத்தில் ரேபிஸ் நோயால் 24 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடுகின்றன. இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மாநிலம் முழுவதும் சுமார் 25 லட்சம் நாய்கள் இருக்கக்கூடும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அனைத்து நாய்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போட முடியாத நிலை இருப்பதால், நாய்க்கடி தொடர்பான உயிரிழப்புகள் தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.
மாவட்ட அளவில் சேலத்தில் 28,166 பேர் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். கடலூரில் 22,113 பேர் பாதிக்கப்பட்டு மூன்று பேர் இறந்தனர். திருநெல்வேலியில் 23,095 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் உயிரிழப்பு இல்லை. சென்னையில் 9,229 பேர் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் 6,25,700 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி 34 பேர் ரேபிஸ் காரணமாக உயிரிழந்ததாகவும், அதனுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு பாதிப்பு குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நாய், பூனை, குரங்கு கடித்த காயங்களை கிருமிநாசினி மூலம் முறையாக சுத்தம் செய்யாமல் விட்டாலோ, தடுப்பூசிகளை தவற விட்டாலோ அல்லது தாமதமாக செலுத்தினாலோ ரேபிஸ் பரவலைத் தடுக்க முடியாது எனவும் அவர்கள் எச்சரித்தனர்.





