சென்னை: தமிழகத்தில் பல்வேறு ரயில் பாதை திட்டங்கள் பல ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்று வருவதால், அவற்றை துரிதப்படுத்த கர்நாடகா பின்பற்றும் முறைபோல் ரயில்வேயுடன் தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மாநிலத்தின் முக்கிய திட்டங்களாகக் கூறப்படும் சென்னை–மாமல்லபுரம்–கடலூர் (179 கி.மீ.), திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை (70 கி.மீ.), திண்டிவனம்–நகரி (179 கி.மீ.), அத்திப்பட்டு–புத்தூர் (88 கி.மீ.), ஈரோடு–பழனி (91 கி.மீ.) உள்ளிட்ட பல திட்டங்கள் நீண்ட காலமாகவே முன்னேற்றம் குறைவாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
போதிய நிதியின்மை மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவை தாமதத்திற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. இதனால், திட்டங்களை விரைவில் நிறைவேற்ற மாநில அரசுகள் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து பணிகளை துரிதப்படுத்தி வருவதாக தெரிவித்தனர். உதாரணமாக, கர்நாடகாவில் பெய்யப்பனஹள்ளி–ஓசூர் இரட்டை ரயில் பாதை (48 கி.மீ.) திட்டம் ரூ.1,160 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுவதுடன், மத்திய அரசு மற்றும் மாநில அரசு தலா 50% செலவு பங்கீட்டில் ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறினர்.
கடந்த மார்ச் நிலவரப்படி ரூ.699 கோடி செலவிடப்பட்டுள்ளதுடன், நடப்பு நிதியாண்டில் ரயில்வே அமைச்சகம் ரூ.124 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். மொத்த 48 கி.மீ. பாதையில் ஹீலாலிகே–பெல்லந்தூர் இடையிலான 14 கி.மீ. பகுதி ஏற்கனவே பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளில் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மாநில அரசின் பங்களிப்பு கிடைத்தால் திட்டங்களை விரைவில் முடிக்க முடியும் என்பதால், தமிழக அரசும் ரயில்வேயுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அதிகாரிகள், இதுகுறித்து தமிழக அரசுடன் விரைவில் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.




