சென்னை: இளைஞர்களிடையே எச்ஐவி குறித்து போதிய புரிதல் இல்லை என்ற கருத்து எழுந்ததைத் தொடர்ந்து, எச்ஐவி மற்றும் பால்வினை மூலம் பரவும் நோய்கள் குறித்து தமிழகத்தில் இரண்டு மாத விழிப்புணர்வு பிரசாரம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகத்தில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அது தவறான தகவல் என அங்குள்ள அரசு விளக்கம் அளித்தது.
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் சீதாலட்சுமி கூறுகையில், தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மாநில மக்கள் தொகையில் 0.16% பேருக்கு மட்டுமே தொற்று இருப்பதாகவும் தெரிவித்தார். வரும் காலங்களில் முழுமையாக அகற்ற தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12 வரை விரிவான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும். பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும், “பிரேக் ப்ரீ இந்தியா” என்ற மொபைல் செயலி மூலம் பால்வினை நோய்கள் தொடர்பாக சுய பரிசோதனை மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





