பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது; அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது தகவல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் சமீபத்தில் துறை செயலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் பல்வேறு நிர்வாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் ஒரு உயரதிகாரி தெரிவித்தார். ஒவ்வொரு மனுவுக்கும் முறையான புகார் தீர்வு நடைமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுக்களின் தீர்வு நிலையை துறைத் தலைவர்கள் வாரந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்; எந்த மனுவும் 30 நாட்களைத் தாண்டி நிலுவையில் இருக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, துறைத் தலைவர்கள் மாதந்தோறும் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு அறிக்கைகளை தாமதமின்றி அனுப்ப வேண்டும்.
மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் மாதந்தோறும் களப்பணிகளை செய்து, தங்களது அறிக்கைகளை பொதுத்துறை வாயிலாக தலைமைச் செயலருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாணைகளும் தாமதமின்றி சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட அம்சங்களுக்கு தொடர்பான அரசாணைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘உங்கள் அரசை தெரிந்து கொள்ளுங்கள்’ திட்டத்திற்காக தகவல் தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒவ்வொரு துறையும் ஒரு தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும். ‘எல் நினோ’ தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சியை எதிர்கொள்ள முன் ஏற்பாடுகள் செய்யவும், மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய மானியங்கள் மற்றும் நிலுவைத் தொகைகளைப் பெற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





