மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற விழாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ‘லோக்மான்ய திலக்’ தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை வழங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவாக, நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

விழாவில் பேசிய அமித் ஷா, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை துறைகளில் தோவல் ஆற்றிய பங்களிப்புகள் இந்திய வரலாற்றில் அவருக்கு நிரந்தர இடத்தை பெற்றுத் தந்துள்ளதாக கூறினார். உள்நாடு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பை ஆய்வு செய்யும் எந்த முயற்சியிலும் தோவலின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

திலகரின் அச்சமற்ற தேசியவாத பார்வைக்கும், தோவல் தலைமையில் உருவானதாக அவர் குறிப்பிட்ட நவீன பாதுகாப்பு கட்டமைப்புக்கும் ஒற்றுமை இருப்பதாக ஷா கூறினார். 2014க்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவு கொள்கை உறுதியுடன் செயல்படத் தொடங்கியதாகவும், அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையும் தோவலின் செயல்பாடும் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

குஜராத்தில் தாம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், தோவல் வழங்கிய தகவல் மற்றும் ஆலோசனைகள் மூலம் ஆமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கைத் தீர்க்கவும், நாடு முழுவதும் நடந்த 13 குண்டுவெடிப்பு சம்பவங்களில் தீர்வு காணவும் போலீசாருக்கு உதவியதாக ஷா கூறினார். சமூகத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கவுரவிப்பது சமூகத்தின் கடமை என்றும், இந்த விருது பல துறைகளில் நாட்டிற்காக உழைப்போருக்கு ஊக்கமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அஜித் தோவல் தனது உரையில், சுதந்திரத்தை “விரும்பியதை செய்வதற்கான கட்டுப்பாடற்ற உரிமை” என இளைஞர்கள் கருதக்கூடாது என்று கூறினார். திலகரின் தொலைநோக்கு பார்வையும் தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 1983 முதல் வழங்கப்படும் இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.