கன்னியாகுமரி: ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு எந்த ஒரு நபரின் “முகம்” ஆக மையப்படாமல், அனைவரும் சமமாக உழைக்கும் அமைப்பாக இருக்க வேண்டும் என்று அதன் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி கடற்கரையில் அமைப்பின் சார்பில் தூய்மை பணியை தொடங்கி வைத்த பிறகு அவர் பேசுகையில், “இன்றைக்கு மட்டும் வந்து செய்தோம்” என்ற அளவில் இல்லாமல், ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்ய வேண்டும் என்றார். தனிநபர் புகழ்ச்சியை விட, அமைப்பினர் செய்த பணியே பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தலைவரே” என்று அழைப்பதும், புகைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் நோக்கம் வழுவியதற்கான அறிகுறி என அவர் கூறினார். இத்தகைய பணிகளில் பெரியவர்–சிறியவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக பங்கேற்க வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

புதிய இயக்கங்கள் தொடக்கத்தில் சில சிக்கல்களை சந்திப்பது இயல்பென கூறிய அவர், ஒரு ஆண்டு காலம் அமைப்பு பக்குவம் பெறும் வரை பிரச்னைகள் இருக்கலாம்; அவற்றை கடந்து செல்ல வேண்டும் என்றார். உறுப்பினர்களில் சிலர் அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர்கள்; சிலர் அரசியல் சாயல் இல்லாமல் இணைந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவில் பிளாஸ்டிக் குப்பை 26 ஆயிரம் டன் அளவுக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இளைஞர்கள் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.