வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட ஒருவரை, அவரது சொந்த நாட்டின் குடியுரிமை உறுதிப்படுத்தப்படாமல் நாடு கடத்த முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நபரை சொந்த நாடு ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அசாமில் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படாமல் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து நடைமுறைகளை விளக்கியுள்ளது.

அதில், குடியுரிமை சரிபார்ப்பு இல்லாமல் நாடுகடத்தும் நடவடிக்கையை தொடங்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடுகடத்துவதற்கு முன் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தின் மூலம் தேவையான பயண ஆவணத்தை பெறுவது அவசியம்; செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்; மேலும் அந்த நாடும் அந்த நபரை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்டனை காலம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்து, எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் நாடுகடத்த முடியும்; இதற்கும் சொந்தநாட்டின் ஒப்புதல் தேவை என மத்திய அரசு கூறியுள்ளது.