சென்னை: சென்னை மற்றும் கோவையில் இயங்கும் அரபிக் கல்லூரிகளுக்காக திரட்டப்பட்ட நிதி, இளைஞர்களிடம் தீவிரவாத கருத்துக்களைப் பரப்ப பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை (ED) விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.
இந்த விவகாரம், 2022 அக்டோபர் 23 அன்று கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையது. அந்த தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஜமேஷா முபீன் உயிரிழந்தார். சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து வரும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் குறித்து ED விசாரணை நடத்தி வருகிறது.
ED வெளியிட்ட தகவலின்படி, ஜமேஷா முபீன் இறப்பதற்கு முன் ஐ.எஸ். அமைப்புக்கு விசுவாசப் பிரமாணம் செய்திருந்தது உறுதியாகியுள்ளது. மேலும், பயங்கரவாத பிரசாரம் செய்ததாக கூறப்படும் முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், முபீன் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும் ED தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேர், கோவை அரபிக் கல்லூரி நிறுவனர் என குறிப்பிடப்படும் ஜமீல் பாஷாவின் மாணவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான நிதி எவ்வாறு திரட்டப்பட்டது என்பதை விசாரிக்கும் பகுதியாக, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை, கோவை, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் 15 இடங்களில் ED சோதனை நடத்தியது. இதில், 2021 ஆகஸ்ட் முதல் 2022 ஜூன் வரை போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்ததாக புதிய மோசடி வெளிச்சத்துக்கு வந்ததாக ED தெரிவித்தது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் மும்பையிலும் தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் பணம் பெற்று சட்டவிரோதமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் ஈட்டிய தொகை குண்டு வெடிப்புக்கான வெடிபொருட்கள் வாங்கவும், கோவை அரபிக் கல்லூரி செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் ED கூறியுள்ளது. மேலும், முன்னாள் மாணவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடமிருந்து நன்கொடைகள் மற்றும் வணிக முதலீடுகள் வழியாக சென்னை, கோவை அரபிக் கல்லூரிகளுக்காக நிதி திரட்டப்பட்டதாகவும், அரபு மொழி கல்வி என்ற போர்வையில் இணையவழி மற்றும் நேரடி வகுப்புகள் நடத்தி இளைஞர்களிடம் தீவிரவாத கருத்துகளைப் புகுத்தும் நோக்கில் அந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை, அசையாச் சொத்து முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பிற சந்தேகநபர்கள் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் ED தெரிவித்துள்ளது.





