புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் நேரடியாக நுகர்வோருக்கு செல்லாமல் தடுக்க, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் உதவியுள்ளது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் விளக்கத்தின்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த காலத்திலும், 20% எத்தனால் கலப்பு திட்டம் காரணமாக டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.77 என்ற அளவில் உள்ளது. இந்த கலப்பு இல்லையெனில் விலை ரூ.125 வரை உயர்ந்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இறக்குமதி கச்சா எண்ணெய் மீதான சார்பை குறைப்பது, உள்நாட்டு விவசாய விளைபொருட்களுக்கு சந்தையை உருவாக்குவது மற்றும் எரிபொருள் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ‘இ-20’ எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் தற்போது நாட்டின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

‘இ-20’ குறித்து சமூக ஊடகங்களில் குழப்பம் ஏற்படுத்தும் தகவல்கள் பரவுவதாகக் குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கையில், எத்தனால் உள்நாட்டில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சகம் தெரிவித்தது. கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோது, இந்த திட்டம் காரணமாக நுகர்வோருக்கு லிட்டருக்கு ரூ.30 வரை சேமிப்பு ஏற்பட்டதாகவும் கூறியது.

மேலும், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் அல்லது இந்திய உணவுக் கழகத்தின் மானிய அரிசி எத்தனால் உற்பத்திக்காக திருப்பி விடப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று அமைச்சகம் மறுத்தது. மேற்காசியாவில் மோதல் வெடித்த பின் 75 நாட்கள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கம் இருந்தபோதும், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விலையை அரசு மாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளது.