இளைஞர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகரித்து வரும் ஆதரவைக் கண்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு “பயம்” ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடிக்கு இளைஞர்களின் ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக கூறினார். தன்னை இளைஞர் தலைவராக காட்டிக் கொள்ளும் ராகுலுக்கு தற்போது இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பு இல்லை என்றும், இளைஞர்களின் ஆதரவு தொடர்ந்து பாஜகவுக்கே இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக Gen Z தலைமுறை எப்போதும் பாஜகவுடன் இருப்பதாக கூறிய கோயல், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இளைஞர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மோடி உலகளவில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் என்றும், இளைஞர்களுடன் அவர் கொண்டுள்ள தொடர்பும் சமூக வலைதளங்களில் உள்ள அவரது செயல்பாடும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில், 2010–11 காலகட்டத்திலேயே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சட்டம் கொண்டு வரத் திட்டமிட்டதாகவும், ஆனால் அதை அறிமுகப்படுத்தும் தைரியம் அவர்களுக்கு இல்லை என்றும் கோயல் கூறினார். 2024ல் பாஜ தலைமையிலான என்டிஏ அந்த சட்டத்தை கொண்டு வந்ததாகவும், தற்போது அதை வலுப்படுத்தும் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





