கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சேவா டிரஸ்ட் தாக்கல் செய்த மனுவில், கும்பாபிஷேகம், பிரமோற்சவம் உள்ளிட்ட விழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க ஒரே மாதிரியான நடைமுறை விதிகள் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதோடு, பொதுமக்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து ஒப்புதல் வழங்கலாம் என மனுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விழாக்களில் பயன்படுத்தப்படும் யானைகளின் தகுதி குறித்து அரசு கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெறுதல், குறைந்தது 8 மணி நேரம் யானைகளுக்கு ஓய்வு வழங்குதல் போன்ற நிபந்தனைகளையும் விதிமுறைகளாக சேர்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.