இலங்கைக்கான இந்தியாவின் வளர்ச்சி உதவி ரூ.71,250 கோடியை கடந்துள்ளதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளில் வளர்ச்சிப் பணிகளை ஆதரிக்கும் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ கொள்கையின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும், இதன் மூலம் இருதரப்பு உறவு வலுப்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்புவில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் இந்திய தூதர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் நல மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்றனர்.

தூதரகத்தின் பதிவில், இலங்கை முழுவதும் மக்களின் நலனை மையமாக வைத்து இந்தியா நிதியுதவி வழங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட தொகையில் ரூ.8,075 கோடி நேரடி மானியங்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.