கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து 8 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாயமான 8 பேரை கண்டுபிடிக்க தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு காரணமாக மங்கலம் அணையிலிருந்து 6 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்துக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிசூர், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையால் பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் சதீசன் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அரசின் முழு ஆதரவும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 5,792 பேர் 209 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், 27 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனதாகவும் கூறினார்.

மலைப் பகுதிகளில் கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும், மழை குறைந்தாலும் எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ளத் தயாராக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.