புதுடில்லி: நீட் முதுநிலை (நீட் பிஜி) தேர்வு முறையில் இந்தாண்டு முதல் முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தேர்வு இனி ஒரே ஷிப்டில் நடத்தப்படும்; கேள்விகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வாக நீட் நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்தாண்டுக்கான நீட் பிஜி தேர்வு ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சுமார் 2.73 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; இது கடந்தாண்டை விட 12.5% அதிகம்.

340 நகரங்களில் உள்ள சுமார் 1,300 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அனைத்து தேர்வர்களும் ஒரே வினாத்தாளை ஒரே மாதிரியான சூழலில் எழுதுவதை உறுதி செய்ய ஒரே ஷிப்ட் முறை கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்பு விண்ணப்பிக்கும் வரிசையைப் பொறுத்து தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் சிலர் வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தாண்டு முதல் அனைத்து தேர்வர்களுக்கும் அவரவர் வசிக்கும் நகரத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்விகள் 200லிருந்து 180 ஆக குறைக்கப்பட்டாலும், தேர்வு நேரம் மாற்றமின்றி மூன்றரை மணி நேரமாகவே இருக்கும்.

முறைகேடுகளைத் தடுக்க விண்ணப்பிக்கும் போதும், தேர்வு நாளன்றும் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு தோல்வியுற்றால் விழித்திரை அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு பயன்படுத்தப்படும். தேர்வு சீராக நடைபெற 60,000-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.