போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும், அது அவர்களின் கனவுகளை சிதைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவுறுத்தினார்.
‘போதை இல்லா இந்தியா’ விழிப்புணர்வு பிரசார திட்டத்தை அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய இளைஞர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியுடன் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், அவை 100 வாரங்கள் தொடரும் என்றும் தெரிவித்தார். போதை இல்லாத பாரதத்தை உருவாக்க சமூகமே உறுதி எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக பார்க்காமல், அவர்களை திருத்த வழிவகை செய்ய வேண்டும் என்றார். “போதைக்கு நோ சொல்லுங்கள்; நாட்டின் வளர்ச்சிக்கு யெஸ் சொல்லுங்கள்” எனவும், போதையிலிருந்து என்றைக்கும் விலகி இருப்பதே திட்டத்தின் மைய நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு காசியில் தொடங்கிய இந்த இயக்கம் தற்போது நாடு தழுவியதாக வளர்ந்துள்ளதாக அவர் கூறினார். கோடிக்கணக்கான குடிமக்களின் நலனுக்காகவும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும் 125க்கும் மேற்பட்ட ஆன்மிக அமைப்புகள் இதில் இணைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.





