கோவை மாவட்டம் பொள்ளாச்சி–உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், கார் ஒன்று லாரி மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி–உடுமலை மெயின் ரோட்டில் திப்பம்பட்டி அருகே, சாலையின் நடுவிலுள்ள சென்டர் மீடியனில் நடவு செய்யப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தப் பணிக்காக தண்ணீர் லாரி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது உடுமலையிலிருந்து கோவை நோக்கி வந்த கார், நிறுத்தியிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் எம்எல்ஏ. வீதியை சேர்ந்த கனகராஜ், அவரது மனைவி பூரணி, மகள்கள் நர்மதா, ஆர்த்தி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





