புதுடில்லி: மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸுக்கு சரியான முகம் யார் என்ற விவாதம் கட்சிக்குள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சில தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்தி தான் பா.ஜ.க-வை எதிர்கொள்ளத் தகுதியானவர் என பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்த பேச்சுக்கு காரணமாக, சமீபத்தில் பிரதமர் இல்லம் அருகே நடந்த ‘நீட்’ வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு அதிகமாக உள்ள அந்த பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் திடீரென தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்; அதில் பிரியங்கா சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டது கவனம் பெற்றது.

இதனால் டில்லி போலீசார் திணறியதாக கூறப்படுகிறது. பெண் போலீசார் அவரை பேருந்துக்குள் இழுக்க, காங்கிரஸ் பெண் தொண்டர்கள் வெளியே இழுக்க முயன்றதால், வண்டியை நகர்த்த முடியாமல் சில நேரம் குழப்பம் ஏற்பட்டதாகவும் தகவல்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, பிரியங்கா தைரியமாக செயல்படுகிறார்; பாராளுமன்றத்திலும் ராகுலை விட நன்றாக பேசுகிறார் என தொண்டர்கள் மத்தியில் பாராட்டுகள் அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் சோனியா காந்தி ராகுலை முன்னிறுத்தி வருவதாகவும் செய்தி கூறுகிறது.