புதுடில்லியில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த காலகட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் சக எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களை வீட்டிற்கு அழைத்து மதிய விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது.
அதே பின்னணியில், காங்கிரஸ் லோக்சபா எம்.பி. சசி தரூர் சமீபத்தில் மதிய விருந்தை ஏற்பாடு செய்தார். இதில் வெளிநாட்டு தூதர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி வழக்கமான விருந்தை விட ‘மாம்பழ பார்ட்டி’ போல இருந்ததாக கூறப்படுகிறது. வந்தவர்களுக்கு மாம்பழம் மற்றும் மாம்பழ சாறு வழங்கப்பட்டதுடன், சில சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டன.
சசி தரூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதில் பங்கேற்கவில்லை. மேலும் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களும் காணப்படவில்லை; சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமே தென்பட்டதாகவும், அதிகமாக பத்திரிகையாளர்களே இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது கருத்துகளை வெளிப்படையாக பேசும் நடை காரணமாக கட்சிக்கு சில நேரங்களில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் தான் மூத்த தலைவர்கள் பலர் வரவில்லை எனவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு தூதர்கள் உலக அரசியல் குறித்து தரூருடன் விவாதித்ததாகவும், பலரின் மனதில் ‘சசி தரூர் காங்கிரசில் தொடர்வாரா?’ என்ற கேள்வி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.





