தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையத்தின் தகவலின்படி, ஆகஸ்ட் 2-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேலும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக நீலகிரி, கோவை (மலைப்பகுதிகள்), தேனி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்னறிவிப்பு, கடலோரப் பகுதிகளில் நிலவும் பலவீனமான தாழ்வுப் பாதையுடன் தொடர்புடைய வளிமண்டல நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.





