கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக பம்பை பகுதியில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகக் கூறி, சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரலாறு காணாத அளவிலான மழை காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொல்லம், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கனமழையால் பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலை பயணத்தை தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும், தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சபரிமலையை உள்ளடக்கிய பத்தனம்திட்டா மாவட்டத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை அபாயம் நீங்கிய பின்னர் ஆன்மீகப் பயணத்தை தொடருமாறு பக்தர்களிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.




