பார்லிமென்ட் வளாகத்தில் வீதி நாடக பாணியில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மீது உத்தர பிரதேசத்தின் வாரணாசி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த போராட்டம் சனாதன தர்மத்தை அவமதித்து, மத உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் ஜூலை 20 அன்று பார்லிமென்ட் நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பேரணி அயோத்தி ராமர் கோவில் காணிக்கை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகளுடன் இணைத்து குறிப்பிடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது, பார்லிமென்ட் நுழைவாயிலுக்கு செல்லும் படிக்கட்டில் காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டு, முறைகேடு குற்றச்சாட்டை சித்தரிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. ராகுல் உள்ளிட்ட எம்.பி.க்கள் அதில் பணம் செலுத்த, காவி உடை அணிந்திருந்த சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் அந்த பணத்தை தன் பாக்கெட்டில் வைப்பது போல நடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் ராமர் மற்றும் சனாதன தர்மம் அவமதிக்கப்பட்டதாக கூறி, சில துறவிகள் வாரணாசி கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ராகுல் காந்தி, பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் பிரசாத் ஆகியோர் மீது சனாதன தர்மத்தை அவமதித்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.





