சென்னையில், தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான ஆவின், ரூ.20 விலையில் 100 கிராம் எடையுள்ள ‘மில்க் ரஸ்க்’ விற்பனையை தொடங்கியுள்ளது.

பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர் பா, மிக்சர், பட்டர் முறுக்கு, மில்க் பிஸ்கெட், குக்கீஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஆவின் தயாரித்து விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.100 கோடி வரை வருவாய் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பல பொருட்களின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டதால், ஆவினுக்கு சுமார் ரூ.120 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சரிவிலிருந்து மீளும் முயற்சிகளில் தற்போது ஆவின் இறங்கியுள்ளது.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக நுகர்வோரை கவரும் வகையில் ‘மில்க் ரஸ்க்’ விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்கள் 80 கிராம் ரஸ்க்கை ரூ.10க்கு விற்பனை செய்யும் நிலையில், ஆவின் 20 கிராம் கூடுதலாக சேர்த்து ரூ.20க்கு வழங்குகிறது எனவும் குறிப்பிடப்பட்டது.

மில்க் ரஸ்க்கிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, ஏலக்காய், முந்திரி, ஓட்ஸ் போன்றவை கலந்த புதிய ரஸ்க் வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.