புதுடில்லி: சி.பி.ஐ. விசாரணை முடிவடைந்திருந்தாலும், தேர்வு முறைகேடு தொடர்பான 158 வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையின்றி நிலுவையில் இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் மட்டும் 2000ம் ஆண்டு முதல் 25 வழக்குகள் விசாரணைக்காக காத்திருக்கின்றன என வட்டாரங்கள் கூறின. இதில் 2010–11 ஆம் ஆண்டுக்கான ‘எய்ம்ஸ்’ முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கைத் தேர்வு, 2011 டில்லி பல்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ நுழைவுத் தேர்வு, 2004 பொது நுழைவுத் தேர்வு முறைகேடு உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
பீஹாரில் 2024 ‘நீட்’ வினாத்தாள் கசிவு தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 2003 மற்றும் 2011 மருத்துவ நுழைவுத் தேர்வு முறைகேடுகள் உட்பட மேலும் ஐந்து வழக்குகள் காத்திருக்கின்றன என்றும் கூறப்பட்டது. தமிழகத்தில் 14 வழக்குகள், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 10, ராஜஸ்தானில் 8, ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகாவில் தலா 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் ஒப்புதல் அளித்த பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்தச் சட்டம்–2026ன் படி, அனைத்து மாநிலங்களிலும் தேர்வு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த நிலையில், ஏற்கனவே நிலுவையில் உள்ள 158 வழக்குகளை அந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்ற அனைத்து உயர் நீதிமன்றங்களையும் அணுக சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் தேவையான உதவிகளை வழங்கவும் சி.பி.ஐ. தயாராக இருப்பதாக கூறப்பட்டது. நீண்ட கால தாமதம் காரணமாக சாட்சிகள் வயதானவர்களாகி விடுதல் அல்லது கிடைக்காமல் போதல், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பது கடினமாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.





