இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஆகஸ்ட் 5 அன்று புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பொதுவெளியில் பேசுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமான பின்னணியில், 2024 ஆகஸ்ட் 5 அன்று அவர் இந்தியாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. வங்கதேசத்தில் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன், ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது உயிர் குறித்து அச்சமின்றி வங்கதேசம் திரும்பப் போவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு திரும்புவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தெற்காசிய வெளியுறவுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் நிகழ்வில் அவர் ஆன்லைன் மூலமாகப் பங்கேற்று உரையாற்ற உள்ளார். டில்லி மதுரா சாலையில் உள்ள சர் மார்க் டுல்லி அரங்கில் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அவரது மகன் சஜீப் வாஜித் ஜாய் நேரில் பங்கேற்க உள்ளார். முன்னாள் அமைச்சர் முஹிபுல் ஹாசன் சௌத்ரி நவுபெல், கிரிக்கெட் வீரர் சாகிப் அல் ஹசன், எழுத்தாளர் அபு ஒபைதா அரின் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





