ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறும் செயல்முறையில் தனிப்பட்ட “சிறப்பு நடைமுறை” பின்பற்றப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடமே விளக்கம் கேட்பது ஏன் என்றும், இப்படியான நடைமுறையை நிறுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த விவகாரம், அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்த போது நடந்ததாக கூறப்படும் டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதை அமல்படுத்தவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.

இன்றைய விசாரணையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி தொடர்பான ஆவணங்கள் ஜூலை 22 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, அனுமதி வழங்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளிடமே விளக்கம் கேட்பது ஏன் என கேள்வி எழுப்பி, வழக்கை ஆகஸ்ட் 24க்கு ஒத்திவைத்தார்.