தமிழகத்தில் உள்ள கோவில்களின் சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றும், கோவில் சொத்துகள் தொடர்பான முறைகேடுகளை கண்டறிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆட்சியில் ஊழலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி என்றும் கூறினார். பேச்சை விட செயலில் காட்டுவதே முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆட்சிக்காலத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கடந்த காலத்தில் எந்தெந்த கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன, என்னென்ன தவறுகள் நடந்தன என்பவற்றை ஆய்வு செய்து வருவதாகவும், ஒவ்வொரு கோவிலின் சொத்துக்களையும் பாதுகாக்கவும் முறைகேடுகளை கண்டுபிடிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறினார். தொடர்ச்சியான நடவடிக்கைகளின் பலன் பின்னர் வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





