நாமக்கல் மாவட்டத்தில் அரசு விழாவாக நடைபெறும் மன்னர் வல்வில் ஓரி விழா நேற்று தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு ஒரு அமைச்சரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்தால் பதவி, பொறுப்பு பறிபோகும் என்ற நீண்டகால ‘சென்டிமென்ட்’ காரணமாகவே இந்த புறக்கணிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆண்ட வல்வில் ஓரி, கடையேழு வள்ளல்களில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். வில் வித்தையில் சிறந்தவர் எனவும், ஒரே அம்பில் பல விலங்குகளை வீழ்த்திய பெருமை பெற்றவர் எனவும் வரலாற்றுக் குறிப்புகள் சொல்லப்படுகின்றன. ஆடிப் பெருக்கு நாளில் அரசு விழாவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
1975-ல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் செம்மேடு பகுதியில் வல்வில் ஓரிக்கு சிலை அமைத்து, ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். 1975 செப். 6-ல் கருணாநிதி சிலையை திறந்து வைத்த பின்னர், 1976 ஜன. 31-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட சம்பவம் இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக பேசப்படுகிறது.
அதன்பிறகு பல காலகட்டங்களில் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்கள், கலெக்டர்கள் பதவி இழந்ததாக கூறப்பட்டதால், அரசியல்வாதிகளும் உயரதிகாரிகளும் மாலை அணிவிப்பதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அச்சம் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய த.வெ.க. அரசில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்ராஜ், லோகேஷ் தமிழ்ச்செல்வன், விஜயலட்சுமி ஆகிய மூன்று அமைச்சர்கள் இருப்பதால், அவர்கள் வந்து ‘சென்டிமென்டை’ உடைப்பார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் வராத நிலையில், வழக்கம்போல் கிராம நிர்வாக உதவியாளர் தான் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்தார்.





