பழநி மடம் நில விவகாரத்தில், மத நிறுவனங்களின் சொத்துப் பத்திரங்களை பதிவு செய்வதற்கான சட்ட விதிகள் பின்பற்றப்படாமல் இருந்ததாக பதிவுத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோவிலுடன் தொடர்புடைய மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் (சுமார் ரூ.100 கோடி மதிப்பு) சமீபத்தில் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட்டு அந்த பத்திரத்தை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், பதிவுத்துறை சார்பில் இரண்டு உயர் நிலை குழுக்களும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும், பழநி போன்றே கோவில்கள், மடங்கள், ஆஸ்ரமங்கள் தொடர்பான சொத்துக்கள் வேறு எந்தெந்த இடங்களில் பதிவு செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளன அல்லது செய்யப்பட்டுள்ளன என்பதையும் அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பத்திரம், பதிவு சட்டத்தின் 22ஏ பிரிவை மேற்கோள் காட்டி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது; மத நிறுவனங்களின் சொத்தை விற்பனை செய்ய அரசின் ஒப்புதல் அவசியம் என்பதே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இதே 22ஏ பிரிவும் துறை வழிகாட்டுதல்களும் பொருந்தும் நிலையில், பழநியில் மடச் சொத்து பத்திரத்தை பதிவு செய்ய ஏற்காமல் சார் பதிவாளர் மறுத்திருக்க வேண்டுமென தெரிவித்தார். அப்போது பணியில் இருந்த தற்காலிக சார் பதிவாளர் இந்த பாதுகாப்பு விதிகளை கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார்.