சென்னை: ஆன்லைன் முறையில் பட்டா பெயர் மாற்றத்தை பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றும் நிலை உருவாகியுள்ளது என தமிழக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாமதத்தை குறைக்கும் வகையில் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்குபவர்கள், விற்பனை பத்திரம் பதிவு செய்யும் போதே பட்டா பெயர் மாற்றத்திற்கும் விண்ணப்பிக்கலாம். சர்வே எண்ணில் உட்பிரிவு உருவாக்க வேண்டிய அவசியம் இல்லாத வழக்குகளில் தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கும் திட்டம் 2020ல் தொடங்கப்பட்டது.
இந்த நடைமுறையில் விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, சார்-பதிவாளர் ஒப்புதல் அளித்த பின், பதிவுத்துறை இணையதளத்திலிருந்து வருவாய் துறையின் ‘தமிழ் நிலம்’ தளத்துக்கு விவரங்கள் அனுப்பப்படுகின்றன.
முன்னதாக பல நிலைகளில் ஒப்புதல் தேவைப்பட்டதுடன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் தலையீடு காரணமாக தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வருவாய், பதிவுத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்கள் நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு, தானியங்கி பட்டா மாறுதலுக்கான சரிபார்ப்பு நிலைகள் நான்கிலிருந்து இரண்டாக குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் சார்-பதிவாளர் ஒப்புதல் அளித்த கோப்புகள் நேரடியாக தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாரிடம் சென்று, அவர் ஒப்புதல் அளித்தவுடன் பட்டா பெயர் மாற்றம் முடிவடையும் என கூறப்படுகிறது. பெயர் மாற்றம் நிறைவடைந்ததும் விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படுகிறது; அடுத்த கட்டமாக மாற்றம் செய்யப்பட்ட பட்டா பிரதியை அனுப்பும் வழிகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





