கோல்கட்டா: வங்கதேசத்தில் நடைமுறையில் உள்ள மதச்சார்ந்த சட்டங்கள் காரணமாக ஹிந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் அடிப்படை உரிமைகளில் பாதிக்கப்படுகின்றனர் என்று எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குற்றம்சாட்டினார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு கோல்கட்டா திரும்பிய அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 63 வயதான தஸ்லிமா, கடந்த 40 ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்துக்காக போராடி வருவதாகவும், நாகரிகமான எந்த நாட்டுக்கும் அது தேவை எனவும் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் ஹிந்து சிறுமிகளுக்கு உரிய சட்ட உரிமைகள் கிடைப்பதில்லை; விவாகரத்து உரிமை கூட இல்லை என்றும், மதரீதியான சட்டங்களால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். மேலும், அங்கு ஹிந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், முகமது யூனுஸ் ஆட்சி காலத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
வழிபாட்டு தலங்களில் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கற்றுத்தரப்படுவதாகவும், பெண்கள் சம உரிமைக்கு எதிராக உள்ள ஜமாத் இ இஸ்லாமி ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் விமர்சித்தார். அப்படி நடந்தால் சிறுபான்மையினர் அங்கு வாழ முடியாது என்றும், வங்கதேசம் இருளை நோக்கிச் செல்கிறது என்றும் அவர் எச்சரித்தார்.
அரசியல் நிலவரம் குறித்து, எந்தக் கட்சிக்கும் தடை விதிக்கக் கூடாது என்றும், அவாமி லீக் கட்சியைத் தடை செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் கூறி, அந்தத் தடையை விரைவில் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவாமி லீக் சார்ந்தவர்கள் வன்முறைக்கும் கொலைக்கும் உள்ளாகிறார்கள் என்றும், ஷேக் ஹசீனா மீண்டும் நாடு திரும்ப நினைத்தாலும் அது சாத்தியமா என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.





