கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதுடன், ஜந்தர் மந்தரில் நடந்த ‘நீட்’ தேர்வு முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் சீருடை அணிந்து ஊடுருவியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. முக்கிய பிரமுகர் ஒருவரின் மகனை கடத்த முயற்சி நடந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது. இதன் போது ஜார்க்கண்டைச் சேர்ந்த அபிதா சர்க்கார் என்ற இளம்பெண்ணின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கொல்கட்டாவில் பதுங்கியிருந்த ஹமீம் மொண்டலை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்தனர்.
மொண்டல் அளித்த தகவலின் அடிப்படையில் அபிதா சர்க்காரும் கைது செய்யப்பட்டார். முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் மகன்களை ‘ஹனி டிராப்’ எனப்படும் காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்யும் செயல்களில் இருவரும் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது.
சிறப்பு அதிரடி படை ஐ.ஜி. கவுரவ் சர்மா கூறுகையில், டில்லி போராட்டத்தில் மொண்டல் போலீஸ் சீருடையில் கலந்து கொண்டு வன்முறையைத் தூண்டி சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பதே நோக்கம் என்றார். மேலும், போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்.
மொண்டல் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆதாரமுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டதாகவும், இது தொடர்பாக தீவிர விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.





