கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர், பைக் டாக்சி தொடர்பாக குழு அமைத்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளதாக கூறினார். அந்த முடிவு எடுக்கப்படும் வரை பைக் டாக்சிகள் இயக்க அனுமதி இல்லை; மீறி இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், தற்போது அனுமதி இல்லை என்ற தகவலை பொதுமக்கள் அறியும் வகையில் ஏன் அறிவிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் விபத்து ஏற்பட்டால் பொறுப்பு யாருக்கு என்ற சந்தேகத்தையும் முன்வைத்தனர். பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குமா இல்லையா என்பது குறித்து அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என அமர்வு தெரிவித்தது.