காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடும் முடிவை தற்போது தள்ளி வைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக, சனிக்கிழமை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூருவில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேச தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக கடிதம் அனுப்பி ஒப்புதலும் பெறப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சூழ்நிலை சரியில்லாததால் விஜய் வருகையை தவிர்க்க வேண்டும் என சிவக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.

இதையடுத்து, தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவெடுத்ததாக கூறப்பட்டது. ஆகஸ்ட் 3-ம் தேதி முறையீடு செய்யும் பணிகளில் அரசு வழக்கறிஞர்கள் கவனம் செலுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கபினி அணை முழுமையாக நிரம்பி, வினாடிக்கு 25,000 கன அடிக்கு மேல் உபரிநீர் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கிடைப்பது உறுதியாகும் சூழல் உருவானதால், உச்சநீதிமன்ற முறையீட்டை தள்ளி வைக்க தமிழக அரசு பரிசீலிக்கிறது.

அதே நேரத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்தால் போதும் என உத்தரவிட்டதாகவும், தமிழகம் 9.19 டிஎம்சி மட்டுமே கேட்டதாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் கர்நாடக முதல்வர் தவறான தகவல் அளித்ததாகவும் தமிழக தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் நடுநிலையாக செயல்பட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.