சென்னை
அரசு வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அதிகாரிகள் தங்களிடம் கூடுதலாக உள்ள அரசு வாகனங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 41 அரசு துறைகளில் 15,000-க்கும் அதிகமான வாகனங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாகவும், சிலரிடம் அதிகபட்சமாக நான்கு கார்கள் வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லஞ்சப் பணம் எடுத்துச் செல்ல அரசு கார்கள், ஜீப்கள் பயன்படுத்தப்படுவதாகவும், பயன்படுத்தாத வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பியதாக போலி கணக்குகள் காட்டி பணம் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசு வாகனங்களின் எரிபொருள் செலவுக்கே மாதந்தோறும் சுமார் 25 கோடி ரூபாய் செலவாகிறது என்றும், வாகன பயன்பாட்டை முறைப்படுத்தினால் செலவு குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி, பொதுத்துறை வாயிலாக வழங்கப்படும் வாகனங்களை மட்டுமே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும் என்றும், அலுவலகம் மற்றும் வீடுகளில் வைத்திருக்கும் வாகனங்களை துறை தலைமை அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் பல துறை அலுவலகங்களில் இருந்து அதிகாரிகள் தங்களின் பயன்பாட்டில் இருந்த வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளும் தங்களிடம் உள்ள வாகன விவரங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருவாய், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், நீர்வளம், பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.





