கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பம்பை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, கனமழையில் தமிழர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கேரளா பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 36 செ.மீ. மழை பெய்ததாகவும், பத்தனம் திட்டா, கோட்டயம், இடுக்கி, வயநாடு, ஆலப்புழா மாவட்டங்களில் 17 செ.மீ. வரை கனமழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டயம், வயநாடு மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 1 அன்று பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, மின் விபத்து, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாளில் எட்டு பேர் உயிரிழந்ததாக கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் எட்டு பேர் மாயமானதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெறுவதாகவும், 209 நிவாரண முகாம்களில் 5,792 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது; குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்திரட்டாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் புத்தரிசி பூஜை நடைபெறுவதால் தமிழகத்திலிருந்து பக்தர்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து, பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நிலச்சரிவு அபாயம் உள்ளதாகக் கூறி, தமிழக பக்தர்கள் பம்பைக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு கேட்டுள்ளது. சபரிமலை மட்டுமின்றி கேரளாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் முடிவையும் சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.




