வாஷிங்டன்: ஈரானுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நள்ளிரவு மத்தியஸ்தர்கள் முன்னிலையில் மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை தீவிரப்படுத்தியதாகவும், கடந்த வாரம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடந்ததை அடுத்து கடுமையான பதிலடி தரப்படும் என டிரம்ப் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியது.

மேற்காசிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீது புதிய ராணுவ தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், அமைதி ஒப்பந்தத்தின் வரைவு தயாராகி வருவதாகவும் டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார்.

ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒப்பந்தம் செய்வதே தனது விருப்பம் என்றும், பேச்சுக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் கூறினார். மோதல் தீவிரமானால் பலர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் அதைத் தவிர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நட்பு நாடுகளின் கோரிக்கையின்பேரிலேயே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். முதலில் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், அதன் பின்னர் ஈரானின் அணுஆயுத ஒழிப்பு குறித்த ஒப்பந்தம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.