சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தொடர்புடைய சிலருக்கு அரசு பதவிகள் வழங்கப்படுகின்றன; ஆனால் அதற்கான அரசாணைகள் பொது வெளியில் வெளியிடப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் பதவி ஏற்ற பின்னர், அவரின் ஆஸ்தான ஜோதிடராக குறிப்பிடப்படும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு ‘சிறப்பு அதிகாரி’ பதவி வழங்கப்பட்டதாகவும், அதற்கான அரசாணை வழக்கம்போல் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு தரப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த அரசாணையை அரசு ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குப் பிறகு, முதல்வரின் ஆலோசகர்கள் மற்றும் அரசியல்–தேர்தல் வியூக வகுப்பாளர்களாக பணியாற்றுவதாக கூறப்படும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசு சார்பில் நியமிக்கப்பட்டதாக மே 5 அன்று தகவல் வெளியானது. ஆனால், அவர்களுக்கான அரசாணை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும், அமைச்சரவை மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களில் அவர்கள் பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முதல்வரின் சமூகவலைதள அட்மின் ஜெகதீஷ் மற்றும் உதவியாளர் ராம்குமார் ஆகியோருக்கு முதல்வரின் நேர்முக உதவியாளர் பணிகள் வழங்கப்பட்டதாகவும், அதற்கான அரசாணைகளும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. த.வெ.க. தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படும் பவுண்சர் நயீம் மூஸா, முதல்வர் செல்லும் இடங்களுக்கு பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து செல்கிறார்; ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட அரசு பணி என்ன என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், முதல்வரின் சமூகவலைதள ரசிகர் மன்ற தலைவராக இருந்த குரு, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் தலைவராகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சமூக ஊடகப் பிரிவு சிறப்பு அதிகாரியாக த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த திவ்யா நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது; ஆனால் இதற்கான அரசாணைகளும் பொது வெளியில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வெளிப்படையான நிர்வாகம் வழங்குவதாக முதல்வர் அறிவித்த நிலையில், அவரைச் சுற்றியுள்ள நியமனங்கள் குறித்து மர்மம் நீடிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்; எதிர்க்கட்சிகள், விமர்சனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரகசியம் காக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றன.





